Suriya நடித்த ‘கருப்பு’ திரைப்படம் தற்போது உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வசூல் 7 நாட்களில் ரூ.207 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, வட இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வர்த்தக வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு, இந்த வெற்றி புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே இந்த சாதனை கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியுள்ளது. 
இதற்கிடையில், கோடை விடுமுறை முடிவதற்கு முன் படத்தின் வசூலை மேலும் உயர்த்தும் நோக்கில் படக்குழு பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளது. இயக்குநர் RJ Balaji தலைமையில் படக்குழுவினர் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் இதுவரை சூர்யா நேரடியாக கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மட்டும் அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, தமிழ் ஊடகங்கள் அல்லது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வுகளில் அவர் தோன்றவில்லை என ரசிகர்கள் சிலர் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
அதே நேரத்தில், Jyothika நடித்த இந்தி ஓடிடி தொடரின் வெளியீட்டு விழாவில் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால், “மும்பை நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்கும் சூர்யா, தமிழ் திரைப்பட புரமோஷன்களுக்கு ஏன் வரவில்லை?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் அதிகமாக எழத் தொடங்கியுள்ளன.
மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா, அங்குள்ள நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுகிறார் என்றும், தமிழ்நாட்டில் ரசிகர்களை நேரில் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், ‘கருப்பு’ வெற்றி விழாவில் அவர் பங்கேற்று இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.


