சென்னை: தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் சமூக சேவகராக அறியப்படும் ராகவா லாரன்ஸ், அரசியலில் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில், அரசியலுக்குள் வருவது தனது நீண்டநாள் திட்டம் அல்ல என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் சமூக சேவைகளை செய்து வந்த அவர், மக்களுக்கு இன்னும் பெரிய அளவில் சேவை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், பணம் சம்பாதிப்பதற்காகவோ அல்லது பதவியை நாடுவதற்காகவோ அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்ற எண்ணமே தனது முடிவிற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் குறித்த தனது பார்வை, வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், தனது தாயாரின் கருத்துகள் மற்றும் அரசியலுக்குள் வரத் தூண்டிய சில முக்கிய நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ராகவா லாரன்ஸின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அரசியல் தளத்தில் அவர் எவ்வாறு செயல்படப் போகிறார், எந்த வகையான மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுக்கப் போகிறார் என்பதைக் காண ரசிகர்களும் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



