சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளார். அதன்படி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட நாமினேஷன் விவரங்களில் காணப்படும் முரண்பாடுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விஜயின் வயது 52 என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, திருச்சி கிழக்கு தொகுதியில் 51 என பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பெரம்பூரில் அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு மனுவில் வழக்குகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதும் விவாதத்தை அதிகரித்துள்ளது.
இந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 6ஆம் தேதிக்குள் ஒரே மாதிரியான மற்றும் சரியான தகவல்களுடன் திருத்தப்பட்ட நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சமூக வலைதளங்களில் பலரும் “கட்சித் தலைவரே இப்படிப் பிழைகள் செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.



