தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய் இன்று நெல்லையில் முக்கிய பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு விஜய் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டை கே.டி.சி நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டப் பந்தலுக்கு செல்கிறார்.
அங்கு திறந்த வேனில் நின்றபடி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 22 வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் விஜய் திறந்த வேனில் நகர்வலம் (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். இந்த நகர்வலம் நெல்லை முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது.
மேலும், 4 வழிச்சாலை வழியாக தாழையூத்து நோக்கி விஜய் பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிரசாரத்திற்காக நெல்லை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் இந்த பிரசாரம், தென் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் திரளாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



