மீட்பு பணிகளுக்காக அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மீட்பு பணிகளுக்காக தெலுங்கு முன்னணி நடிகர்கள் அள்ளி கொடுத்து வருகிறார்கள். காக்கிநாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையே கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களாக பேய் மழை கொட்டி வருகிறது. சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து முதல் தளத்தை தாண்டி தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் குளிரில் தஞ்சமடைந்துள்ளார்கள்.
மீட்பு பணி
விமான நிலைய ஓடுதளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்திற்கு அண்டைய மாநிலங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை
அது போல் தெலுங்கு உச்ச நடிகர்களும் தாராளமாக நிதியுதவியை அளித்து வருகிறார்கள். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பேய் மழையால் சிங்கார சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஹைதராபாத்தை பார்க்கும் போது சென்னை கண் முன் நிழலாடுகிறது.
ரூ 1 கோடி
கடந்த 1916-ஆம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு 24 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டார்கள். இதையடுத்து வெள்ள நிவாரண நிதியாக ரூ 1 கோடியை நடிகர் சிரஞ்சீவி தெலுங்கானா முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு ரூ 1 கோடியும், விஜய் தேவாரகொண்டா ரூ 10 லட்சமும் நாகார்ஜுனா 50 லட்சமும், ஜூனியர் என்டிஆர் ரூ 50 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அண்டை மாநிலங்களும் வெள்ள நிவாரண நிதியை அளித்து வருகிறார்கள்.
13.082680280.2707184