Thangalaan: நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு முதல் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் டேனியல் கால்டாகிரோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிகின்றனர். கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸின் சுரங்கத் தொழிலாளர்களைச் சுற்றி நடக்கும் காலகட்ட நடைமுறையை வைத்து ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு ‘தங்கலான்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படத்தின் தலைப்பிற்கு பின்னால் இருக்கும் வரலாறு பற்றின தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக, தங்கலான் என்பது ஒரு இனத்தின் தலைவர், பாதுகாவலர், எல்லைப் போராளி அல்லது மக்களைப் பாதுகாப்பவர் என்று பொருள்படும். ஆனால் 1881 இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என்பதிலிருந்து இந்தப் பெயரை பிரித்தெடுத்ததாக கூறப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பறையர் சமூகத்தின் 84 உட்பிரிவுகள் உள்ளதாகவும், ‘தங்கலான் பறையன்’ 59 வது தமிழ் பேசும் பறையர் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு இங்கிருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. சமூகங்கள் மக்களின் பணியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த பழங்குடியினர்தான் கோலார் தங்க வயல்களில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியை செய்தனர்.
இந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான கடின உழைப்பு மற்றும் போர்க்குணமிக்க இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். சமீபத்தில், திரைப்படக் குழு தங்கலான் மற்றும் சியான் விக்ரமின் வித்தியாசமான சிகை அலங்காரத்தின் ஒரு பார்வை வீடியோவை வெளியிட்டது. குறிப்பிட்ட சிகை அலங்காரம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திராவிட இனத்தைச் சேர்ந்த தென்னிந்திய பழங்குடி சமூகங்களின் சிகை அலங்காரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.