போன மாதம் 8ம் தேதி கலைஞானம் சார் எனக்கு போன் செய்தார். அடுத்த மாதம் 14ம் தேதி எனக்குப் பிறந்தநாள். முக்கியமான பிறந்தநாள். 90வது பிறந்தநாள் என்று சொன்னார். வாழ்த்தினேன்.
’அடுத்த மாதம், அதற்காக பாரதிராஜா ஒரு விழா எடுக்கிறார். நீங்கள் அவசியம் வரவேண்டும். நீங்கள் வந்து கலந்துகொண்டால்தான் விழா பூர்த்தி அடையும்’ என்று கலைஞானம் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு ‘தர்பார்’ ஷூட்டிங் இருக்கேன்னு சொன்னேன். பாரதிராஜா பேசுவார் உங்ககிட்ட’ன்னு சொன்னார் கலைஞானம்.
அப்புறமா, பாரதிராஜா பேசினார். ‘என்ன தலைவா… எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டார். நானும் அவரும் தனியா இருக்கும் போது, பாரதிராஜா என்னை தலைவான்னுதான் கூப்பிடுவார். ஆனா, என்னுடைய ரசிகர்கள் தலைவான்னு கூப்பிடுவதற்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.
அதேபோல், என்னுடைய படத்தை ஊரே கொண்டாடிக்கொண்டிருக்கும். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், பாரதிராஜா, ‘அதென்னய்யா… பாட்டி வடை சுட்ட கதைல நீ நடிச்சாக்கூட ஓடிரும் போல’ என்று கிண்டல் செய்வார். அப்புறம், ‘உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குய்யா’ என்று சொல்லுவார்.
அதேசமயம், ’மதுரையில் எம்ஜிஆருக்கு விழா எடுத்திருக்கேன். சிவாஜிக்கு விழா எடுத்திருக்கேன். உனக்கும் ஒரு விழா எடுத்துடுறேன். அதுக்குப் பிறகு நீ அரசியலுக்கு வா. அப்புறமா கச்சேரியை வைச்சிக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்வார் பாரதிராஜா.