சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் கலைஞானம்தான் முக்கியமான ஆள். அவருடைய கதையில் ‘ஆறுபுஷ்பங்கள்’ படத்தில் நான் நடித்தேன். அப்போதிருந்தே என்னை அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.
பிறகு ஒருநாள் என்னைப் பார்க்க வேண்டும் என்று வந்தார் கலைஞானம். ‘நான் ஒரு படம் தயாரிக்கிறேன். கதை சொல்றேன். பிடிச்சிருந்தா நடிங்க’ன்னு சொன்னார். எனக்கு கதை பிடிச்சிருந்தது.
‘நீதான் ஹீரோ’ன்னார் கலைஞானம். சத்தியமா சொல்றேன். கண்டக்டரா இருந்தேன். நடிக்க வந்தேன். ஒரு வீடு, கையில கொஞ்சம் பணம் இதெல்லாம் இருந்தாலே போதும்னு நினைச்சேன். ஹீரோவாகணும்னு சத்தியமா ஆசைப்படவே இல்லை. வில்லனாகவே நடித்துக் கொண்டே இருப்போம் என்றுதான் நினைத்தேன். ஆனாலும் நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணம் இருந்தது. எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் படம் ‘பாதாள பைரவி’. இன்றைக்கும் அந்தப் படம் நினைவில் இருக்கிறது.
‘அபூர்வ ராகங்கள்’ என் முதல் படம். அந்தப் படத்தில் எனக்கு வைத்த முதல் ஷாட்டில், ‘பைரவி வீடு இதுதானா?’ என்பது. இந்தப் படத்துக்கு ‘பைரவி’ என்று பெயர். இதையெல்லாம் கலைஞானம் சொன்னதும் வியப்பாக இருந்தது. இவையெல்லாம் ஏதோவொரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதாகத்தான் உணர்ந்தேன். அதற்காகவே, நடிக்க ஒத்துக்கொண்டேன்.
அப்போது நான் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டேன். தரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த நாளே பனம் தந்தார். ஆனால் தாலியை விற்று பணம் தந்தார் என்று எனக்குத் தெரியாது.
படத்தில், கருப்பு சட்டை, தாடி கெட்டப் பார்த்துவிட்டு, ’ரொம்ப நல்லாருக்கு. படம் நல்லாப் போவும்’ என்றார். ஒரு பாம்பைக் கொண்டுவரச் சொன்னார். அந்தப் பாம்பைப் பிடித்துக்கொண்டு ‘போஸ்’ கொடுத்தேன். ‘இதுதான் படம் ரிலீசாகும் போது போஸ்டர்’ என்றார். அந்தப் படத்துக்கு கலைப்புலி தாணு, ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்தார். நான் மறுத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ். மறுநாள் ராஜகுமாரி தியேட்டருக்கு என்னை அழைத்துச் சென்றார் கலைஞானம். படம் ஹவுஸ்ஃபுல். இரண்டு தியேட்டர் ஆடியன்ஸ் வாசலில் காத்திருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு செம கைத்தட்டல். வெளியே வந்ததும், அப்படியே என்னைத் தூக்கிவிட்டார்கள் ரசிகர்கள்.
இதன் பிறகு, என்னை பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள். நானும் ஓடிக்கொண்டே இருந்தேன். நான் ஒரு முட்டாள். ‘அடுத்து என்ன படம் பண்றீங்க?’ என்றெல்லாம் கலைஞானத்திடம் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கவில்லை. பிறகு ‘அருணாசலம்’ படத்தில் சிறிய உதவி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இப்போதும் அவர் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று சிவகுமார் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெரிய மனதுடன் முதல்வரிடம் சொல்லி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தார். அவருக்கு என் நன்றி. ஆனால் இந்த வாய்ப்பை அரசாங்கத்துக்கு நான் தரமாட்டேன். உடனடியாக, பாக்யராஜ் அவர்கள், ஒரு வீடு பார்த்துவிட்டு சொல்லுங்கள். அவருக்கு சொந்தவீடு வாங்கித்தருகிறேன். அதுவரை, கலைஞானம் என் வீட்டுக்கு வந்து தங்கிக்கொள்ளட்டும். அவருடைய உயிர், என்னுடைய வீட்டில்தான் பிரியவேண்டும். அவருடைய சொந்தவீட்டில்தான் பிரியவேண்டும்.