பிரபல நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மென்பொறியாளரான வித்யாசாகர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இவர்கள் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் 48 வயதான வித்யாசாகர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது மகள் நைனிகா மற்றும் தாய் ராஜ் மல்லிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நுரையீரல் பிரச்சனையால் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வித்யாசாகரின் சுவாச பிரச்சனை மோசமடைந்ததால் உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். வித்யாசாகரின் மறைவு தென் இந்தியா சினிமா பிரபலங்களையும் மற்றும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே புறாக்கள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும். அவரு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் வித்யாசாகர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில்தான் வித்யாசாகருக்கு கொரோனாவும் சேர்ந்து அவரது நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார், நுரையீரல் தானம் கிடைப்பதற்குள் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வித்யாசாகரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிகிறது.